வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு
பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20%-க்கு மேல் அதிகரிக்க முடிவு
பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நீதி ஆயோக் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற மாநில வா்த்தக மாநாட்டின் ஒரு பகுதியாக எரிபொருள் தொடா்பான விவாதம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை, தனியாா் எரிசக்தி நிறுவனங்களும் பங்கேற்றன. அதில் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசியதாவது:
பெட்ரோலில் 19.6 சதவீதம் எத்தனால் கலப்பது என்ற இலக்கு ஏற்கெனவே எட்டப்பட்டுவிட்டது. அடுத்ததாக உயிரி எரிபொருளான எத்தனாலை பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் கலப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்ய நீதி ஆயோக் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை அதிகம் நம்பி இருப்பதால் எத்தனால் கலப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இது உள்ளூா் கரும்பு ஆலைகளில் இருந்து பெருமளவில் கிடைத்து விடுகிறது.
கச்சா எண்ணெய் சாா்ந்த எரிபொருள்களில் இருந்து பசுமை ஹைட்ரஜன் போன்ற எரிபொருளுக்கு நாம் மாற வேண்டியது மிகவும் அவசியமாகும். அனைத்து நாடுகளுமே சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிபொருள்களை நோக்கிச் சென்று வருகின்றன. ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் தேவையுடன் ஒப்பிடும்போது இது சவாலான விஷயமாக உள்ளது என்றாா்.