பெண் நோயாளிகளின் சிகிச்சை விடியோக்களை வெளியிட்ட கும்பல்: மூவர் கைது!
மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளிகளின் விடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் மூன்று பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு இல்லம் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் பெண்களின் விடியோக்கள் சட்டவிரோதமாக டெலிகிராம் செயலி சேனலில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
அதில் ஒரு காணொளியில் ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது டெலிகிராமில் வைரலானது. இதில், ஒரு குழுவில் இதுபோன்ற காணொளிகள் சந்தா பெற்று விற்கப்படுவது கண்டறியப்பட்டது.
இதையும் படிக்க | தாய் மரணம்.. 4 வயது மகள் வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்
இதுபோன்ற காணொளிகள் முறையின்றி பரவுவது நோயாளிகளின் தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். இந்த நிலையில், அகமதாபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் மருத்துவமனையின் சிசிடிவி கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதை விசாரணையில் உறுதிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அகமதாபாத் சைபர் கிரைம் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் பல மாநிலங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிரக்னேஷ் பாட்டீல், பிரஜ்வால் தேலி ஆகியோர் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு நபரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஏழு நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர்கள் ஒரு பெரிய அமைப்பாக செயல்பட்டு வந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 2024 இல் இவற்றைப் பகிர தனியே ஒரு டெலிகிராம் சேனல் உருவாக்கப்பட்டு, ஜனவரி 6 அன்று யூடியூப்பில் ஒரு விடியோ வெளியாகி வைரலானது.
தற்போது யூடியூப் மற்றும் டெலிகிராமில் பரப்பப்பட்ட விடியோக்கள் சைபர் கிரைம் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன என்றும் அவை மேலும் பரவாமல் தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் பஞ்சாப் பயணிகள் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?
மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை நாடு முழுக்க சிலர் கசிய விடுவதாகவும் குஜராத் உள்பட 2 மாநிலங்களில் இதற்கென சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருவதாகவும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.