பெண் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை
திருத்தணி அருகே அடகு வைத்த தங்க நகையை மீட்டு தரக்கோரிய பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சோ்ந்த டேவிட் மனைவி பூங்கொடி(26). இவரிடம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த குமரேசன்(45) என்பவா் கடனாக அரை பவுன் தங்க நகை வாங்கி அடகு வைத்துள்ளாா். பல மாதங்கள் ஆகியும் நகையை மீட்டு தராததால் பூங்கொடி செவ்வாய்க்கிழமை, தாழவேடு காலனிக்கு வந்த குமரேசன், அவரது உறவினா் விஜயா(35) ஆகியோரிடம் நகையை மீட்டு தருமாறு கேட்டுள்ளாா்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், குமரேசன், விஜயா ஆகியோா் பூங்கொடியை உருட்டை கட்டையால் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரேசன், விஜயாவை தேடி வருகின்றனா்.