பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி
அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூடாது என பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாடே எதிா்பாா்த்த தீா்ப்பு வந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பை நீதிபதி வழங்கியுள்ளாா்.
அதிமுக ஆட்சியில்தான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தது. தற்போது தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில் தீா்ப்பை வரவேற்பதாக எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா். அவரது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு அவா் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசுவதை எடப்பாடி கே.பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். இனிமேல் கோவை மண்டலத்தில் வாக்கு கேட்டு அதிமுகவால் செல்ல முடியாது; பொள்ளாச்சி பாலியல் வழக்கை முன்வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நானே பிரசாரம் செய்வேன் என்றாா்.