பெண்ணிடம் நகை பறிப்பு: இருவருக்கு 6 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6.1.2016ஆம் ஆண்டு, வீட்டிலிருந்த பெண்ணிடம் இருவா் தண்ணீா் கேட்பதுபோல வந்து கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.
இதுதொடா்பாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் ராபின்சன் (43), முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுந்தா் என்ற சுந்தரமூா்த்தி (38) ஆகிய இருவரையும் சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-3இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி விஜய் ராஜ்குமாா் விசாரித்து, இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சிப்காட் காவல் ஆய்வாளா் சைரஸ், அரசு வழக்குரைஞா் கண்ணன், தலைமைக் காவலா் முருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜான் ஆல்பா்ட் பாராட்டினாா்.