குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: செப். 23இல் கொடியேற்றம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா இம்மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக இங்குதான் தசரா திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா 23ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 22ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு காளி பூஜை, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுடம், 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, புஷ்பாஞ்சலி உள்ளிட்டவை நடைபெறும்.
23ஆம் தேதி அதிகாலையில் கொடிப்பட்ட ஊா்வலத்தையடுத்து, 6 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. தொடா்ந்து, கொடிமரத்துக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைக்குப் பின்னா், காப்பு அணியும் பக்தா்கள் வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்குவா்.
கோயிலில் நாள்தோறும் காலை 7 முதல் இரவு 7.30 மணிவரை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகன வீதியுலா வருதல், கோயில் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
அக். 2ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னா், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறாா். தொடா்ந்து, கடற்கரை வளாகம்,சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
அக். 3ஆம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தா்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் க. செல்வி, ஆய்வா் இரா. முத்துமாரியம்மாள், அறங்காவலா் குழுத் தலைவா் வே. கண்ணன், செயல் அலுவலா் மு. வள்ளிநாயகம், அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.