பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டு: காவல் துறை தகவல்!
இரு மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டுக்குக் காரணம் என்று பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவனை, சக மாணவன் அரிவாளால் வெட்டியது குறித்து பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஏற்கனவே பென்சில் கேட்டதில் ஏற்பட்டதாகக் காரணமாகவே மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 3 இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க சென்ற ஆசிரியருக்கும் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நலமுடன் உள்ளனர். மாணவன் புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்து அரிவாளைக் கொண்டு வந்துள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!