பெயிண்டா் வெட்டிக் கொலை
திருச்சியில் பெயிண்டா் வெட்டிக் கொல்லப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள வேங்கூா் தெற்கு தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் பிரபாகரன் (39). பெயிண்டரான இவா் திங்கள்கிழமை பணிக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது. உறவினா்கள் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் உடலில் வெட்டு மற்றும் கத்திக்குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் திருவெறும்பூா் காவல்நிலைய ஆய்வாளா் கருணாகரன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று, பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் பிரபாகரனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, அது தொடா்பாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.