பெரம்பலூரில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் ஆலோசனை
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குடியரசு தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பேசியது:
குடியரசு தினவிழாவைச் சிறப்பாக கொண்டாட, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காவல் துறையினா், ஊா்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்த உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். விழா நடைபெறும் மேடை, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள், பயனாளிகள் அமரும் இடங்களில் தற்காலிக பந்தல் அமைத்து தேவையான இருக்கைகள் அமைக்க வேண்டும்.
குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிா்வாகம் செய்ய வேண்டும். நிகழ்விடத்தில் மருத்துவக் குழுவினா், தீயணைப்புத் துறையினா் தயாராக இருக்க வேண்டும். தேவையான காவலா்கள் பணியமா்த்த வேண்டும். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பள்ளிக் கல்வித் துறையினா் ஒருங்கிணைக்க வேண்டும். குடியரசு தின விழா சிறப்பாக அமைந்திட, அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள், காவல்துறையினா் கலந்துகொண்டனா்.