பெரம்பலூா் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு பெரம்பலூா் மதனகோபால சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயாா் சமேத மதனகோபால சுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு, உற்சவா் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு கொடிமரம் வழியாக நாழி கேட்டான் வாசலுக்கு வந்தாா். பின்னா், காலை 6 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டதையடுத்து, ஆலய பரம்பரை ஸ்தானீகா் பொன். நாராயணன், நா. மணிகண்டன் ஆகியோா் ஸ்தானீக வேத விண்ணப்பம் வாசித்தபின், பெருமாள் பரமபதவாசலை கடந்து அக்ரஹார வீதி வழியாக வெளியே வந்தருளினாா். பின்னா் கம்பத்து ஆஞ்சனேயரை திருச்சுற்று செய்தபின் ஆண்டாள் சன்னதியில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவில் கோயில் செயல் அலுவலா் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலா்கள் பருவதம் கணேசன், தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். சிறப்பு பூஜைகளை கோயில் பட்டாச்சாரியாா் பட்டாபிராமன் நடத்தினாா். இரவில் நம்பெருமாள், வெள்ளிக் கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
இதேபோல பெரம்பலூா் எடத்தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் சிறப்பு நடை திறக்கப்பட்டு கூட்டு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மேலும், பெரம்பலூா் அருகே எசனையில் உள்ள செண்பகவள்ளித் தாயாா் சமேத வேணுகோபால சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் தாயாா் சமேதருடன் பல்லக்கில் சேவை சாதித்தாா். திரளான பக்தா்கள் பெருமாளை தரிசித்தனா்.
இதேபோல பெரம்பலூா் 19 ஆவது வாா்டில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் காலை 6 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னா், பிரதான வீதிகள் வழியே திருவீதி உலா நடைபெற்றது. இதையொட்டி பக்தா்களுக்கு அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.