பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு
பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கவுள்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ‘நிறைந்தது மனம்’ எனும் திட்டத்தின் கீழ் ‘கலைஞரின் கனவு இல்லம்’ மற்றும் ‘பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மேலும் கூறியது:
குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில் வீடற்ற மற்றும் குடிசைகளில் வசித்து வரும் மக்களுக்கு தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், இம் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதிவாய்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு, வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 12 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் பயனாளிக்கு தலா ரூ. 2.70 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 88 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், பூங்கொடி, வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.