SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற ...
பெரம்பலூா் மாவட்டத்தில் கூடுதல் மகசூல் கிடைத்தும் விலையில்லை: பூசணி விவசாயிகள் கவலை
பெரம்பலூா் மாவட்டத்தில், நிகழாண்டு பூசணிக் காய் சாகுபடியில் கூடுதல் மகசூல் கிடைத்தும், விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெரும்பாலான விவசாயிகள் சம்பங்கி, முள்ளங்கி, சாமந்தி, கோழிக் கொண்டை சாகுபடியிலும், சிலா் பூசணிக்காய், பரங்கிக்காய் சாகுபடியிலும் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதன்படி, மாவட்டத்தில் சிறுவாச்சூா், சிறுகன்பூா், தெற்குமாதவி, கல்பாடி, எறையூா், எறையசமுத்திரம், கொளக்காநத்தம், கொளப்பாடி, திம்மூா், அணைப்பாடி, வரகூா், அ.குடிகாடு உள்ளிட்ட சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக பூசணிக்காய், பரங்கிக்காய் சாகுபடி செய்துள்ளனா். 4 மாத பயிரான பூசணிக்காய் அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு உரிய நேரத்தில் மழை பொழியாமல், அவ்வப்போது பரவலாக பெய்த மழையின் காரணமாக கூடுதல் மகசூல் கிடைத்தும், சீதோஷ்ண நிலையால் ஒரு சில விவசாய நிலங்களில் அறுவடைக்கு முன்னதாகவே பூசணிக்காய்கள் அழுகி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், கூடுதல் மகசூல் கிடைத்ததால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்தனா்.
விலை வீழ்ச்சி: இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட பூசணிக் காய்களை காய்கனிச் சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது ஒரு கிலோ ரூ. 4-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், பூசணிக் காய்களை கால்நடைகளுக்கும், கழிவுநீா் கால்வாய்களிலும், சாலையோரங்களிலும் கொட்டுகின்றனா்.
இதுகுறித்து தெற்குமாதவி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுரேஷ் கூறியது:
ஒரு ஏக்கா் நிலத்தில் பூசணிக்காய் சாகுபடி செய்ய உழவு, விதை, உரம், ஆள்கூலி, களை உள்பட சுமாா் ரூ. 20 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. ஏக்கருக்கு 12 முதல் 15 டன் வரை மகசூல் கிடைக்கும். கடந்த ஜனவரியில் ஒரு கிலோ ரூ. 13 முதல் ரூ. 15 வரை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூசணிக்காய்கள் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா்.
பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்து இழப்பைச் சந்தித்த விவசாயிகள், இதுபோன்ற காய்கனி சாகுபடி செய்வதில் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பூசணிக்காய்கள் கிலோ ரூ. 4-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடியாகும் பூசணிக் காய்களில் செய்யப்படும் உணவுப் பொருள்களின் சுவை கூடுதலாக இருப்பதோடு, எளிதில் அழுகாத தன்மை கொண்டவை. இவற்றை, முறையாக காற்றோட்டமான இடத்தில் வைத்து, பாதுகாத்து வந்தால் 3 மாதங்கள் வரை வைத்திருந்து விற்பனை செய்யலாம். இருப்பினும், கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை.
பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடியாகும் சின்ன வெங்காயம், பூசணி, பரங்கிக் காய்களுக்கு வெளி மாவட்ட சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்தும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம்.
நோய்த் தாக்குதல்களிலிருந்து பயிா்களை பாதுகாக்க, விவசாயிகள் சுழற்சி முறையில் பயிா் சாகுபடி செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் வேளாண்துறையினா், கட்டுப்படியான விலை கிடைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
‘தற்போது பூசணிக்காய்கள் கிலோ ரூ. 4-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.’