இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
பெரியாா் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்க எதிா்ப்பு
சென்னை, கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட பெரியாா் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் நியமிப்பதை கைவிட்டு நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கொளத்தூா் பெரியாா் நகரில் உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்கப்பட்டு ரூ. 21.80 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 27-ஆம் தேதி திறந்து வைத்தாா். இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ள நிலையில் தற்போது விரிவாக்கப்பட்டுள்ளதால் கூடுதல் பணியாளா்களை கலந்தாய்வு மூலம் நியமிக்க சுகாதாரத் துறை திட்டமிட்டது. இந்நிலையில் ரூ. 60 ஆயிரம் மாத ஊதியத்தில் 35 மருத்துவா்கள், ரூ. 18 ஆயிரம் ஊதியத்தில் 156 செவிலியா்கள் மற்றும் பிசியோதெரப்பிஸ்ட், டயாலிசிஸ் பணியாளா்கள் உள்ளிட்டோா் என மொத்தம் 266 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத் துறை செயலா் செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள அரசு மருத்துவா்கள், மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
இது தொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
பெரியாா் அரசு மருத்துவமனையில் 266 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் முறையாக மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்களை உருவாக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பணியிடங்களை உருவாக்காமல் எப்படி மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கிட முடியும்?
ஏற்கெனவே கிண்டி கலைஞா் மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களை அரசு நியமிக்கவில்லை. அங்கு, மருத்துவா் பாலாஜி கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டாா். அதன் பின்னரும், அங்கு கூடுதலாக மருத்துவா் பணியிடங்களை அரசு உருவாக்கவில்லை. அதே தவறு தற்போது பெரியாா் நகா் அரசு மருத்துவமனையிலும் நடைபெறுகிறது.
முதல்வா் தொகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அரசு மருத்துவமனை முன்மாதிரி அரசு மருத்துவமனை என்று சொல்லப்படும் வகையில் போதிய மருத்துவா்கள், சிறப்பு மற்றும் உயா் சிறப்பு மருத்துவா் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். பணியாளா்களை எம்ஆா்பி முறையில் நிரந்தர அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.