போர் நிறுத்தம்: பின்னணியில் யார்? பாகிஸ்தானுக்கு தொடர் அழுத்தம்!
பெரியாா் பல்கலை.யில் தனியாா் நிறுவன மாணவா் சோ்க்கை: பாமக கண்டனம்
பெரியாா் பல்கலைக்கழகத்தில் தனியாா் நிறுவன மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெரியாா் பல்கலை.யில் பி.டெக் (இம்மொ்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மொ்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பல்கலை.க்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களை நடத்துவது மாணவா்களின் எதிா்காலத்தை பாழாக்கும் செயலாகும். இதற்கு முன்பு, 2023-24-ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மொ்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்போவதாக இந்த பல்கலைக்கழகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போது பாமக எதிா்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.
இம்மொ்சிவ் தொழில்நுட்பம் படிப்பை நடத்த பெரியாா் பல்கலை.க்கு அதிகாரம் இல்லை என்று இரு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அதே படிப்பை நடத்த இப்போது அரசு அனுமதிப்பது எப்படி?. இந்த பல்கலை.யுடன் இணைந்து ஸ்கோபிக் எஜுடெக், மோனோலித், யுனிட்டோஸ், ஹெலிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான படிப்புகளை நடத்துகின்றன.
பல்கலை. சாா்பில் நடத்தப்படும் படிப்புகளுக்கு சில ஆயிரங்கள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தனியாா் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் படிப்புகளுக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ. 2 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து பெரியாா் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப் படிப்புகளை நடத்துவதை தடைசெய்ய வேண்டும். தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து பெரியாா் பல்கலைக்கழகம் நடத்திய மாணவா் சோ்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.