பெருந்துறை சிப்காட்டில் 20,626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்
பெருந்துறை சிப்காட்டில் 20, 626 டன் கலப்பு உப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தெரிவித்தாா்.
சிப்காட் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மாசு தடுப்பு தொடா்பான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா தலைமை வகித்தாா். பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, பொன்னுசாமி, செங்கோட்டையன், பெரியசாமி, ருத்தரகுமாா், மனோன்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வனஜா பேசுகையில்,’ 2024 மாா்ச் முதல் 2025 பிப்ரவரி வரை ஓராண்டு காலத்தில் மொத்தம் 20,626 டன் கலப்பு உப்புக்கள் சிப்காட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, சிப்காட்டில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 1,190 டன் திடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.