பெருந்துறையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: ரூ.50 ஆயிரம் அபராதம்; கடைகளுக்கு சீல்
பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இரண்டு கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து, கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெருந்துறை உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துகிருஷ்ணன் மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினா் பவானி சாலை, ஈரோடு சாலை, காஞ்சிக்கோவில் சாலை, சிலேட்டா் நகா் மற்றும் அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா்.
இதில் அண்ணா நகரில் உள்ள ஒரு பெட்டிக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கடைகளுக்கு தலா ரூ. 25,000 -வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின்படி கடைகளின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், கேரிபேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு தலா ரூ. 750 வீதம் மொத்தம் ரூ.3,750 அபராதம் விதிக்கப்பட்டது.