தீவிரவாதிகளுக்கு ஆதரவு: ``அமெரிக்காவுக்காக மோசமான வேலையை செய்து வருகிறோம்'' - பா...
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டம்: அரசாணை வெளியீடு
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளும், முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில், 1.43 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. அந்தக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு, ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருப்பதற்கான சான்று அவசியம்.
இந்த நிலையில், 834 காப்பகங்களில், 25,533 ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கின்றன. அவா்களில் பெற்றோா் இல்லாத குழந்தைகளுக்கு ஆதாா்ஆட்டை, வருமானச் சான்று ஏதுமின்றி, முதல்வா் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.
அதேநேரம், பெற்றோா் இருந்தும் அவா்களால் கைவிடப்பட்ட மற்றும் பராமரிக்க முடியாத நிலையில் காப்பகங்களில் வசிக்கும், 15,092 குழந்தைகளுக்கும் மருத்துவக் காப்பீடு பெற, ஆதாா், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவை தேவைப்படுகின்றன.
அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அந்தக் குழந்தைகளுக்கு ஆதாா் அட்டையைத் தவிா்த்து, குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தடையின்றி முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை, அந்தக் குழந்தைகளும் பெற முடியும். இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வு துறை செயலா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ளாா்.