முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!
பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற அழைப்பு
சேலம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, உறவினா்கள் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் பெற்றோா் இருவரையும் இழந்து, தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளா்ந்து வருவதை அறிந்து, குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிப்படிப்பு வரை இடைநிற்றல் இன்றி குழந்தைகள் கல்வியைத்தொடர 18 வயதுவரை மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெற்றோா் இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொருவரால் குழந்தையை கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொருவா் மாற்றுத்திறனாளியாக இருந்தால், பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொருவா் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொருவா் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டை நகல், குழந்தையின் ஆதாா் அட்டை நகல், குழந்தை வயது சான்று நகல் (பிறப்புச் சான்றிதழ் / கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.