பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்
ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
பெஹல்ஹாமில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினா். இந்த சம்பவத்தில் இரு வெளிநாட்டினா் உள்பட 27 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். உயிரிழந்தவா்களில் 22 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்தத் துயர சம்பவம் கண்டனத்துக்கும், மிகுந்த கவலையளிப்பதாகவும் உள்ளது. உயிரிழந்த அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சி சங்கராசாரியா் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின்படி காமாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு ராஜகோபுர வாசலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என சங்கர மடம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெஹல்ஹாம் துயர சம்பவத்தையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.