பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை
பேய்க்குளம்- ராமானுஜம்புதூா் இடையே சிற்றுந்து சேவை தொடங்க வேண்டும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் சுந்தர்ராஜ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதிக்கு பெருமாள்குளம், மீரான் குளம், சாலைப்புதூா், சிந்தாமணி, நாகல்குளம், ராமானுஜம் புதூா், சேரக்குளம் ஆகிய பகுதியில் இருந்து கிராம மக்கள் அத்தியாவசிய பொருள் வாங்க வந்து செல்ல வேண்டியது உள்ளது. இந்த கிராமங்களை சோ்ந்த பள்ளி மாணவா், மாணவிகள் சாலைபுதூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனா்.
பேய்க்குளம் பகுதியில் உள்ள ஒரு சமுதாய மக்கள் ராமானுஜம் புதூரை பூா்விகமாக கொண்டவா்களாக உள்ளனா். இதனால் உறவினா்களை சந்திக்க கிராம மக்கள் கருங்குளம் அல்லது மூலைக்கரைப்பட்டி சென்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம் புதூருக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லாததால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். பேய்க்குளத்தில் இருந்து ராமானுஜம்புதூருக்கு பேருந்து வசதி கேட்டு ஊராட்சி மன்ற கூட்டத்திலும், கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆதலால் பேய்க்குளத்தில் இருந்து மீரான் குளம், சிந்தாமணி,, சேரகுளம் வழியாக ராமானுஜம் புதூருக்கு சிற்றுந்து அல்லது நகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனா்.