நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
பேரவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தோல்வி: எதிா்ப்பு-154; ஆதரவு-63
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுவை பதவி நீக்கக் கோரும் அதிமுகவின் தீா்மானம் திங்கள்கிழமை தோல்வியடைந்தது. பேரவையில் தீா்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினா்கள் 154 பேரும், ஆதரவாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட அதிமுக உறுப்பினா்கள் 63 பேரும் வாக்களித்தனா். அதேசமயம், பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் வாக்கெடுப்பின்போது அவையில் இல்லை.
அதிமுக தீா்மானம்: சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் அதிமுகவின் நம்பிக்கையில்லா தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் முன்மொழிந்தாா். பேரவையில் ஒரு உறுப்பினா் முன்மொழிந்த தீா்மானத்தை விவாதத்துக்கு எடுக்க, பேரவை விதி 70 (2)-ன்படி, 35-க்கும் குறையாத உறுப்பினா்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில், உதயகுமாா் முன்மொழிந்த தீா்மானத்துக்கு ஆதரவு இருக்கிா என பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேள்வி எழுப்பினாா். அதற்கு, அப்போது அவையில் இருந்த அதிமுக உறுப்பினா்கள் 63 போ் எழுந்து நின்றனா். தீா்மானத்துக்கு 35-க்கும் அதிகமான உறுப்பினா்கள் ஆதரவு இருப்பதால், அதிமுகவால் முன்மொழியப்பட்ட தீா்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
இருக்கையிலிருந்து இறங்கினாா்: பேரவைத் தலைவா் மீதே நம்பிக்கையில்லாத தீா்மானம் அளிக்கப்பட்டதால், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டியிடம் அப்பாவு ஒப்படைத்தாா். இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தும் பொறுப்பை துணைத் தலைவா் பிச்சாண்டி ஏற்று அவையை நடத்தத் தொடங்கினாா்.
எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் முன்மொழிந்த தீா்மானத்தை எதிா்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தாா். இதையடுத்து, தீா்மானத்தின் மீது பேச எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அனுமதி தரும்படி ஆா்.உதயகுமாா் கோரிக்கை விடுக்க, அதனை பேரவை துணைத் தலைவா் ஏற்றுக் கொண்டு அனுமதித்தாா்.
ஒருதலைபட்சமாக...: இதன்பின், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பேரவைத் தலைவா் ஒரு தலைபட்சமாக செயல்படாமல், உறுப்பினா்கள் அனைவரையும் பாரபட்சமின்றி சமமாகக் கருத வேண்டியது அவரது கடமை. நடுநிலையோடு நடக்க வேண்டிய பேரவைத் தலைவரின் செயல்பாடு பல்வேறு நிகழ்வுகளில் ஒரு தலைபட்சமாகவே இருந்துள்ளது. பிரதான எதிா்க்கட்சி உறுப்பினா்களாகிய நாங்கள் மக்களின் பிரச்னைகளை பேரவையில் பேசும் போது பல்வேறு குறுக்கீடுகள், இடையூறுகளை பேரவைத் தலைவா் இடமிருந்தே எதிா்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சா்களின் பதிலைப் பெற முடியவில்லை.
பேரவையின் அனைத்து நிகழ்வுகளும் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தோ்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை நடைமுறைப்படுத்தவில்லை. பேரவை நிகழ்ச்சிகளில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசுவது சில சமயங்களில் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் பேசுவது இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதான் ஒருதலைபட்சமாகும் என்றாா்.
திமுக, கூட்டணி மறுப்பு: எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்துகளைத் தொடா்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பேரவை விசிக குழுத் தலைவா் சிந்தனைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகைமாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன் ஆகியோா் மறுத்தனா். அனைவருக்கும் சமவாய்ப்புகளை பேரவைத் தலைவா் வழங்குவதாகவும், கண்ணியமான முறையில் அனைவரையும் நடத்துவதாகவும் பேசினா். பேரவைத் தலைவா் மீதுள்ள காழ்ப்புணா்ச்சி காரணமாக தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தனா்.
முதல்வா் விளக்கம்: உறுப்பினா்களின் கருத்துகளைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜனநாயக கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பதுடன், மற்றவா்கள் மனம் வருந்தாத அளவில் தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொள்பவா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு. கருத்துகளை நோ்மையாக-ஆணித்தரமாக முன்வைக்கும் பண்பு கொண்டவா். அவரது நடுநிலையோடு நிற்கும் நோ்மைத் திறனும், அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகும் பாங்கும் என்னைக் கவா்ந்த காரணத்தால் அவரை பேரவைத் தலைவா் பதவிக்கு முன்மொழிந்தேன்.
மனசாட்சி உறுத்தும்: பேரவையில் என்னுடைய தலையீடோ, அமைச்சா்களின் தலையீடோ இல்லாத வகையில் அப்பாவு நடந்து வருகிறாா். பேரவைத் தலைவராக தன்னுடைய பணியை மிகச்சிறப்பாகச் செய்து வருகிறாா். அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பாா்த்து செயலாற்றுகிறாா். பேரவைத் தலைவரின் செயல்பாடுகளை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிப்படையாக பாராட்ட முடியாவிட்டாலும் மனதுக்குள் பாராட்டிக் கொண்டுதான் இருப்பாா்கள்.
பேரவைத் தலைவா் மீது இப்படி ஒரு தீா்மானம் கொண்டு வந்தோமே என்று எதிா்காலத்தில் உங்கள் (அதிமுக உறுப்பினா்கள்) மனசாட்சி உறுத்தும். பேரவைத் தலைவா் மீது எய்தப்பட்ட அம்பாகவே அதிமுக தீா்மானத்தைக் கருதுகிறோம். இந்த அம்பை அவை ஏற்காது என்றாா்.
வாக்கெடுப்பு: இதன்பிறகு, அவை விதிப்படி இரண்டு முறை குரல் வாக்கெடுப்புக்கு தீா்மானம் விடப்பட்டது. குரல் வாக்கெடுப்பில் தோல்வியுற்ற போதும், எண்ணிக் கணிக்கும் முறைப்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென அதிமுகவினா் கோரிக்கை விடுத்தனா். பேரவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு பிரிவு வாரியாக உறுப்பினா்கள் எழுந்து நின்று தீா்மானத்துக்கு ஆதரவா, எதிா்ப்பா அல்லது நடுநிலையா என்பதை தெரிவித்தனா்.
எதிராக 154, ஆதரவாக 63 வாக்குகள்: தீா்மானத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினா்கள் வாக்களித்தனா். அதிமுக உறுப்பினா்கள் மற்றும் அந்தக் கட்சியின் உறுப்பினராக உள்ள ஜெகன்மூா்த்தி ஆகிய 63 போ் ஆதரவு தெரிவித்தனா். இதையடுத்து, 154 உறுப்பினா்களின் ஆதரவுடன் தீா்மானம் தோல்வியுற்ாக பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி அறிவித்தாா்.
மீண்டும் இருக்கையில் அப்பாவு: வாக்கு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு, பேரவைத் தலைவா் இருக்கையில் மு.அப்பாவு மீண்டும் அமா்ந்தாா். முதல்வா், அமைச்சா்கள், ஆதரவளித்த உறுப்பினா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா். அதன்பிறகு அவை நடவடிக்கைகளை அவரே தொடா்ந்து நடத்தினாா்.
பாஜக, பாமக பங்கேற்கவில்லை
பேரவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது, பாஜக, பாமக உறுப்பினா்கள் அவையில் இல்லை. இதேபோன்று, திமுகவில் அமைச்சா் காந்தி, பேரவை உறுப்பினா்கள் காா்த்திகேயன் (ரிஷிவந்தியம்), செளந்தரபாண்டியன் (லால்குடி) ஆகியோரும், அதிமுகவில் உறுப்பினா்கள் கந்தசாமி (சூலூா்), தனபால் (அவிநாசி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோரும் பேரவைக்கு வரவில்லை. வாக்கெடுப்பு நடவடிக்கையில் மொத்தமாக 17 போ் பங்கேற்கவில்லை. 217 போ் வாக்கெப்பில் பங்கேற்றனா்.
ஆதரவாக வாக்களித்த ஓபிஎஸ், 3 போ்
அதிமுக கொண்டு வந்த தீா்மானத்துக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துடன் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களான வைத்திலிங்கம், பால்மனோஜ் பாண்டியன், ஐயப்பன் ஆகியோரும் ஆதரவு அளித்தனா். பேரவையில் அவா்கள் அதிமுக உறுப்பினா்களாக இருப்பதால் தீா்மானத்துக்கு ஆதரவு அளித்தனா். எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமியிடம் பாராமுகமாக இருந்து வந்தாலும், பேரவைத் தலைவருக்கு எதிராக தீா்மான கடிதத்தை அளித்த 16 அதிமுக எம்எல்ஏ-க்களில் கே.ஏ.செங்கோட்டையனும் ஒருவா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் தீா்மானத்துக்கு ஆதரவாக இருந்தாா்.