பேராசிரியா் மா.செல்வராசனுக்கு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அளிப்பு
கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை பேராசிரியா் மா.செல்வராசனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி, தனது பெயரிலான அறக்கட்டளையை முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நிறுவினாா். இதற்காக ரூ.1 கோடி சொந்த நிதியை வைப்புத் தொகையாக அளித்து, அதிலிருந்து பெறப்படும் தொகையைக் கொண்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு கலைஞா் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, சென்னை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியா் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை அவருக்கு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்த விருது ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கருணாநிதியின் உருவச் சிலையும் அடங்கியதாகும்.
இந்த நிகழ்வில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் மருத்துவா் சுதா சேஷய்யன், இயக்குநா் இரா.சந்திரசேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.