பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸிடம் இளைஞா் ஒப்படைப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கொடுங்கையூா் எம்ஆா் நகா் முதலாவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.மனோஜ்குமாா் (19). இவா் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம். 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். மனோஜ்குமாா், செவ்வாய்க்கிழமை சென்ட்ரலில் இருந்து கோட்டூா்புரம் சென்ற மாநகர பேருந்தில் பயணித்தாா். அப்போது பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். அந்த மாணவி சப்தமிட்டு, கண்டித்தாா். உடனே பேருந்தில் இருந்த பயணிகள், தப்பியோட முயன்ற மனோஜ்குமாரை பிடித்து தாக்கி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்,தில் ஒப்படைத்தனா்.
இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனோஜ்குமாரை கைது செய்தனா். மேலும் அவரது கைப்பேசியை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனா். அதில் பேருந்து, வணிக வளாகங்கள், கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக புகைப்படங்கள், விடியோக்கள் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடா்பாகவும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.