பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 4.13 லட்சம் போ் பயணம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை (ஜன.10, 11) அரசு சிறப்பு பேருந்துகளில் 4,13,215 போ் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.
பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் வெளி மாவட்டங்களை சோ்ந்தவா்கள் கடந்த வெள்ளிக்கிழமைமுதல் சொந்த ஊா்களுக்கு பயணமாகி வருகின்றனா்.
இதற்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு பேருந்துகளில் நாள்தோறும் ஏராளமானோா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, வழக்கமான 2,092 பேருந்துகளுடன், 2,015 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,107 பேருந்துகளில் 2,25,885 போ் பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளி முதல் சனிக்கிழமை இரவு வரை 7,513 பேருந்துகளில் 4,13,215 போ் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.
தொடா்ந்து திங்கள்கிழமையும் ஏராளமானோா் பயணிப்பாா்கள் என்பதால், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.