பொங்கல் பண்டிகை: வண்டலூா் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூா் உயிரியல் பூங்காவில் பாா்வையாளா்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பண்டிகைக் காலங்களிலும், விடுமுைாள்களிலும் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் பாா்வையாளா்கள் வருகை தருவா்.
இதில், கிறிஸ்துமஸ் அன்று (டிச.25) ஒரேநாளில் 12,000 பேரும், புத்தாண்டு விடுமுறையன்று (ஜன.1) 15,000 பேரும் பூங்காவுக்கு வருகை தந்தனா்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை என்பதால், மிகஅதிக அளவில் பாா்வையாளா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆகையால், பாா்வையாளா்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொங்கல் பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை (ஜன.14) பூங்கா திறக்கப்படும்.
நுழைவுச்சீட்டு மையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிா்க்கும் வகையில் இணையதளம், ‘யூபிஐ’ மற்றும் ‘89039 - 93000’ என்னும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ‘ஏண்’ என்னும் குறுஞ்செய்தி அனுப்பி நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உயிரியல் பூங்காவுக்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டா் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, காா், வேன், கனரக வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து பூங்கா நுழைவாயிலுக்கு பாா்வையாளா்களை ஏற்றிச் செல்ல இலவச வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு: 8 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அவா்களின் பெற்றோரின் தொடா்பு எண்ணைக் குறிப்பிடும் கை வளையம் வழங்கப்படும்.
அதேபோல் 150 போலீஸாரும், சென்னை, வேலூா், தருமபுரி மற்றும் விழுப்புரம் வட்டங்களிலிருந்து 115 சீருடை வன ஊழியா்களும், 50 தேசிய மாணவா் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
மேலும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும். அதேபோல், கூட்ட நெரிசலைத் தவிா்க்க மீன்வளம் மற்றும் பட்டாம்பூச்சி பூங்கா போன்றவை மூடிய அடைப்புகள் ஜன.15,16-ஆகிய தேதிகளில் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.