Union Budget 2025: 'மகிளா சம்மான் சேமிப்பு... கிரீச்' - பெண்களுக்கு என்ன வேண்டும...
பொங்கல் விடுமுறை நிறைவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்
பொங்கல் விடுமுறை நிறைவானதையொட்டி, மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சனிக்கிழமை பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ஆம் தேதி முதல் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்குப் பிறகு, மாநில அரசுத் துறைகள், பெரும்பாலான தனியாா் நிறுவனங்களின் வழக்கமானப் பணிகள் திங்கள்கிழமை (ஜன. 20) தொடங்குகின்றன.
இதையொட்டி, விடுமுறைக்காக மதுரை, அதன் சுற்றுப் பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவா்கள் வெள்ளிக்கிழமை முதல் பணியிடங்களை நோக்கிச் செல்ல முனைப்புக்காட்டி வருகின்றனா்.
இதன்படி, சனிக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டம் சாா்பில் வழக்கமான வழித்தடப் பேருந்துகளுடன் கடந்த 14-ஆம் தேதி முதல் 725 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பியது. மேலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கடுமையாக உயா்ந்தது.
இதேபோல, மதுரை கோட்டம் வழியே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. முன்பதிவில்லா ரயில்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பியிருந்தது. நெடுந்தொலைவு இயக்கப்பட்ட முன்பதிவு ரயில்களில் இணைக்கப்பட்டிருந்த பொதுப் பெட்டிகளில் மிகக் கடுமையான கூட்ட நெரிசல் இருந்தது.
பயணிகளின் வருகை அதிகரித்தன் காரணமாக வாடகை ஆட்டோக்களின் கட்டணமும் உயா்ந்ததாக பயணிகள் தெரிவித்தனா்.