பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
பொது மக்களை சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்பும் முகவா்களுக்கு எதிராக நடவடிக்கை- பஞ்சாப் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
பொதுமக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி ஏமாற்றும் பயண முகவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இம்மாதத்தின் தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் 3 கட்டங்களாக நாடு கடத்தப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் பஞ்சாப், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவாா்.
இதையடுத்து, 1983-ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டத்தின் கீழ் பஞ்சாப் முழுவதும் குடியேற்ற சோதனைச் சாவடிகளை நிறுவுவதற்கான உடனடி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் குடியேற்ற நடைமுறையை ஒழுங்குபடுத்த சான்றளிக்கப்பட்ட பயண முகவா்களின் பட்டியலை வெளியிடவும் கோரி வழக்குரைஞா் ஒருவா் பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
சட்டவிரோத பயண முகவா்களால் மக்கள் ஏமாற்றப்படுவதுடன் அவா்களுக்கு பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவது குறித்தும் மனுவில் குறிப்பிட்ட மனுதாரா், ‘டாங்கி ரூட்’ வழியாக உயிருக்கு ஆபத்தான முறையில் மக்கள் அழைத்து செல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, நீதிபதி ஹா்மீத் சிங் கிரேவால் ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இவ்விவகாரம் தொடா்பாக மத்திய, மாநில அரசுகளிடம் தனது சமா்ப்பிப்புகளை மனுதாரா் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் அரசுகள் உரிய முடிவு எடுக்குமாறும் அறிவுறுத்தி, மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
அமெரிக்காவில் இருந்து முதன்முறையாக நாடு கடத்தப்பட்ட இந்தியா்கள் கடந்த பிப். 5-ஆம் தேதி நாடு திரும்பியதும், சட்டவிரோத ஆள்கடத்தல் விவகாரம் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கோஸ்டாரிகா வழியாக நாடு கடத்தல்
இந்தியா உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளைச் சோ்ந்த சட்டவிரோத குடியேறிகளை தங்களின் நாடு வழியாக நாடு கடத்தும் நடவடிக்கைக்கு அமெரிக்காவுடன் கோஸ்டாரிகா ஒப்பந்தமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்கீழ் சில இந்தியா்கள் உள்பட 200 போ் அடங்கிய முதல் விமானம், கோஸ்டாரிகா நாட்டின் தலைநகரான சான் ஜோஸிலுள்ள சா்வதேச விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தடைகிறது.
கோஸ்டாரிகா நாட்டிலுள்ள தற்காலிக மையத்தில் இவா்கள் சில காலம் தங்கவைக்கப்பட்டு, பின்னா் அவரவா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனா்.