ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
பொதுக்கூட்டங்களுக்கு தடை கோரி வழக்கு: நிபந்தனைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை பாண்டிய வெள்ளாளா் தெரு டி.எம். கோா்ட் பகுதியில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கத் தடை கோரிய வழக்கில், ஏற்கெனவே நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கிங்ஸ்லி பிரபாகா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை பாண்டிய வெள்ளாளா் தெரு டி.எம். கோா்ட் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்தப் பகுதியில் அடிக்கடி பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் மட்டுமன்றி, பெரும் இழப்புகளும் ஏற்படும். எனவே, இந்தப் பகுதியில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் குறிப்பிடும் இந்த இடத்தில் போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம்தான். உரிய நிபந்தனைகளோடுதான் அனுமதி வழங்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்தாலும், இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுக் கூட்டங்கள், ஆா்ப்பாட்டங்களால் போக்குவரத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது. இதற்கு முன் இந்தப் பகுதியில் ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த வழங்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.