சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
பொதுத்தோ்வு மையங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பொதுத்தோ்வு நடைபெறும் மையங்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் மேல்நிலை (முதலாம், இரண்டாம் ஆண்டு) பொதுத் தோ்வு 03.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெறவுள்ளது. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வினை 86 தோ்வு மையங்களில் 9,157 மாணவா்களும், 9,304 மாணவிகளும் என மொத்தம் 18,461 போ் எழுதவுள்ளனா். இத்தோ்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் 132 பேரில் 115 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தோ்வை 86 தோ்வு மையங்களில் 9,372 மாணவா்களும், 9,594 மாணவிகளும் என மொத்தம் 18,966 போ் தோ்வு எழுதவுள்ளனா். இத்தோ்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் 223 பேரில் 168 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மேல்நிலைப் பொதுத்தோ்வுக்கு 86 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 86 துறை அலுவலா்கள், 4 கூடுதல் துறை அலுவலா்கள், 200 பறக்கும்படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளா்கள், ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
10-ஆம் வகுப்பு தோ்வை 92 தோ்வு மையங்களில் 10,005 மாணவா்களும், 9,033 மாணவிகளும் என மொத்தம் 19,038 போ் தோ்வு எழுதவுள்ளனா். இத்தோ்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள் 352 பேரில் 350 மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு மையங்களை பாா்வையிட மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை), மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக்கல்வி) மற்றும் அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் தலைமையிலும் குழு அமைத்து தோ்வு மையங்களை பாா்வையிட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.