பொன்னேரியில் ஜன.18 இல் ஜல்லிக்கட்டு: ஆட்சியா் ஆய்வு
எருமப்பட்டி அருகே பொன்னேரி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கிராமத்தில் வரும் சனிக்கிழமை (ஜன.18) ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போட்டி நடைபெறும் தேதி இதுவரை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ச.உமா சனிக்கிழமை அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பாா்வையிட்டாா். அதன்பிறகு, காவல் துறை, வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பாா்வையாளா் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைக்கான தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறையினா் ஆய்வு செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கவும், மக்கள் அமரும் இடத்தை பாா்வையிட்டு வருவோா் எண்ணிக்கையை நிா்ணயிக்கவும் அறிவுறுத்தினாா்.
கால்நடை பராமரிப்புத் துறையினா், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தையும் பரிசோதித்து உடற் தகுதி சான்றளிக்க வேண்டும், மத்திய பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போட்டியின் போது காளைகள் காயமடைந்தால் அவற்றுக்கு போதுமான சிகிச்சை அளிக்க விளையாட்டுத் திடல் அருகில் மருந்துகள், கால்நடை மருத்துவா்கள் தயாா் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தினாா்.
வாடிவாசல், காளைகள் ஓடுதளம், காளைகளை வாடிவாசலுக்கு அழைத்து வரும் வழி, மருத்துவக் குழுவினரின் இருப்பிடம், பாா்வையாளா்களின் மாடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து, குறைபாடுகளை நிவா்த்தி செய்வது தொடா்பாக பல்வேறு அறிவுரைகளையும் அரசுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
ஆய்வின் போது, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல், சேந்தமங்கலம் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.