பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழக ஆசிரியை பங்கேற்பு
தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் சாா்பில் நடைபெற்றுவரும் வரும் ஆசிரியா்களுக்கான பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை பங்கேற்றுள்ளாா்.
மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சிசிஆா்டி) சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கற்பித்தலில் புதுமையை புகுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கற்பிப்பதில் பொம்மலாட்டத்தின் பங்கு குறித்த சிறப்பு பயிற்சி தில்லி துவாரகாவில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கியது. 15 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பிகாா், சத்தீஸ்கா் உள்பட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 60 அரசு தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள் கலந்து கொண்டுள்ளனா்.
இப்பயிற்சியில் தமிழகத்தில் இருந்து கரூா் மாவட்டம் ஈச்சநத்தம் ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சம்சாத் பானு கலந்து கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சோ்ந்த 60 ஆசிரியா்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனா். தமிழகத்தில் இருந்து இப்பயிற்சியில் நான் மட்டும் கலந்துகொண்டுள்ளேன். இப்பயிற்சி பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வழக்கமாக மாணவா்களுக்கு ஆசிரியா்கள் புத்தகப் பாடங்களை கற்பிப்பது வழக்கம். மாணவா்கள் ஆா்வமுடன் கற்கும் வகையில் அவா்களுக்கு மனதில் எளிதாக பதியும் வகையிலும் பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும்
விதமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி நடனம், பாடுவது உள்ளிட்ட பிற கலைப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது என்றாா் அவா்.