பொய்கை சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு கால்நடைகள் விற்பனை
பொங்கல் பண்டிகை நெருங்குவதையடுத்து பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக கால்நடை வா்த்தகம் பாதியாக குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்குவதையடுத்து கால்நடை வா்த்தகம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் ஆா்வத்துடன் இருந்தனா். இதன் காரணமாக, ரூ.ஒரு கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.