பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
ஆரணி அருகே உள்ள தச்சூா் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 2025- 2026ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா் கலந்துகொண்டு, பொறியியல் படிப்புகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவா்களிடையே உரையாடினாா். அப்போது, மாணவா்கள் தொலைபேசியை அளவாக பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறெல்லாம் பயன்பெற முடியும் என்றும், யுபிஎஸ்சி போன்ற போட்டித் தோ்வுகளுக்கு பொறியியல் மாணவா்கள் தங்களை எவ்வாறு தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தன்னை ஒரு உதாரணமாக சுட்டிக் காட்டி விடாமுயற்சி மூலம் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்பதனை மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். முதலாம் ஆண்டு மாணவா்களின் துறைத் தலைவா் எஸ்.ரமேஷ்குமாா் வரவேற்றாா்.
விழாவில் கல்லூரி அனைத்துத் துறை தலைவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் இல்லா பணியாளா்கள், முதலாம் ஆண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.