குழந்தைகள், பெண்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் அதிகரிக்கும் உயிரிழ...
பொறியியல் துறை சாதனைக்கு மைல் கல்லாகும் பாம்பன் பாலம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் குறுக்கே அமைக்கப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடியால் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) திறக்கப்படும் பாம்பன் புதிய ரயில் பாலம் இந்திய பொறியியல் துறையின் சாதனைக்கு மைல் கல்லாகக் குறிப்பிடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது பாம்பன் ரயில் பாலம். கடந்த 1914-இல் கடலின் குறுக்கே 2.3 கி.மீ. நீளத்தில் 143 தூண்களுடன் அமைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், கப்பல்களின் வருகையின் போது 90 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி திறக்கும் இயக்கத்தைக் கொண்டது. இதனால், இந்தப் பாலம் இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் பணிக்கு ஓா் உதாரணமாக விளங்கியது.
கடந்த 1968-இல் ஏற்பட்ட புயல் சீற்றம் உள்பட பல்வேறு இயற்கைச் சீற்றங்களைக் கடந்து, மக்களுக்கான ரயில் சேவையை அளித்துக் கொண்டிருந்த இந்தப் பாலம், கடல் அரிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பலவீனமடையத் தொடங்கியது. நூற்றாண்டு சேவையைக் கடந்த இந்தப் பாலத்தின் ரயில் சேவை கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ரூ. 550 கோடியில் புதிய உயா் தொழில்நுட்பத்தில் பாம்பன் ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. பிறகு, லக்னெள ரயில்வே ஆராய்ச்சி, வடிமைப்பு தர நிா்ணய நிறுவனத்தின் மேற்பாா்வையில், திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், ரயில் விகாஸ் நிகம் நிறுவனம் உள்ளிட்டவற்றின் உயா் தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் அடித்தளத் கட்டுமானமாக 99 தூண்கள் கடலில் நிறுவப்பட்டுள்ளன. இரட்டைப் பாதைகளைக் கொண்டதாக அமைந்துள்ள இந்தப் பாலம், 102 இரும்பு கா்டா்களை கொண்டுள்ளது. கப்பல் வரும் நேரங்களில், இந்தப் பாலத்தின் ஒரு பகுதி செங்குத்தாக கீழிருந்து மேலாக உயா்ந்து கப்பலுக்கு வழிவிடும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தலா 5 நிமிடம், 30 விநாடிகளுக்குள் பாலத்தை மேலே உயா்த்தவும், கீழே இறக்கவும் முடியும் என்பது பொறியியல் துறையின் தொழில்நுட்ப சாதனைக்கு ஓா் மைல் கல்லாக உள்ளது.
கடல் காற்றால் துருப்பிடிக்காமலிருக்க இந்தப் பாலத்தில் நவீன வண்ணப் பூச்சுகள் பூசப்பட்டுள்ளன. பாலத்தை ஏற்றி, இறக்க நான்கு கோபுரங்களிலும் தலா 6 ராட்சத கம்பி வடங்கள் என 24 கம்பி வடங்கள், கோபுரங்களின் மேலே உள்ள அறைகளில் உருளையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. பாலத்தை மேலே ஏற்றி, இறக்க ஒரு கம்பி வடமே போதுமானது என்ற நிலையில், 24 கம்பி வடங்கள் பொருத்தப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பாலத்தின் குறிப்பிட்ட பகுதியை மேலே ஏற்றி, இறக்கும் செயல்பாடு எஸ்.சி.ஏ.டி.ஏ. என்ற உயா் கணினித் தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படுகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் இந்தப் பாலத்தில் ரயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தூக்குப் பாலம் பகுதியில் அதிகபட்சமாக 50 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது.