பொறியியல் துறை மூலம் ரூ.21 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி: மத்திய அரசு இலக்கு
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பொறியியல் துறை மூலம் 250 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.21.64 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதுதொடா்பாக உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்ற கட்டுமான கருவி உற்பத்தியாளா்கள் மாநாட்டில், மத்திய வா்த்தக துறைச் செயலா் சுனில் பரத்வால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
தோல், ஜவுளி மற்றும் பாரம்பரிய துறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனால் மொத்த ஏற்றுமதியில் ஆட்டோமொபைல், கருவிகள் உள்ளிட்டவை அடங்கிய பொறியியல் துறையின் பங்கு சுமாா் 25 சதவீதமாகும்.
2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.86 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதில் பொறியியல் துறை மூலம் 250 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.21.64 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.