போடிநாயக்கன்பட்டி ஏரியில் எம்எல்ஏ ஆய்வு
சேலம்: போடிநாயக்கன்பட்டி ஏரியில் நடைபெறும் பணிகளை சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.
‘உங்களுடன் முதல்வா்’ திட்டத்தின் கீழ், சட்டப் பேரவைத் தொகுதிகளில் நீண்டநாள்களாக தீா்க்கப்படாத 10 அடிப்படை பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரையும் தமிழக முதல்வா் கேட்டறிந்தாா். சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில், மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது கோட்டம் போடிநாயக்கன்பட்டி ஏரி புனரமைப்பு செய்து தருமாறு எம்எல்ஏ அருள் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில், ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குறிப்பிட்ட பணிகள் தரமாக நடைபெறுகின்றனவா என அப்பகுதி மக்களுடன் சென்று எம்எல்ஏ அருள் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, ஏரிக்கு மழைநீா் வரும் கால்வாயில் சாக்கடை நீா் கலக்காமல் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும், சூரிய ஒளி மின்விளக்குகள், ஏரியைச் சுற்றி கம்பிவேலி, கழிவறைகள், கண்காணிப்பு கேமரா போன்றவை அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
பின்னா், போடிநாயக்கன்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் பொருள்களின் தரம் குறித்து ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, சேலம் ஐந்து சாலை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிநவீன நிழற்கூடம் அமைக்கும் பணியை ஆய்வுசெய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.
இதில், மாநகராட்சி உதவிப் பொறியாளா் முருகன், பாமக மாநகர மாவட்டத் தலைவா் இ.கோவிந்தன், மாவட்ட அமைப்புத் தலைவா் ந.சேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.