போதைப் பொருள் விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திருவொற்றியூா் விம்கோ நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனராம். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது அவா்கள் மறைத்து வைத்திருந்த 36 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா்கள், எண்ணூா் சிவகாமி நகரைச் சோ்ந்த கிஷோா் குமாா் (27), மதன் (18), திருவொற்றியூா் கேவிகே குப்பம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (18), எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்த ஜரீனா சல்மா (62) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.