ஓடும் ரயிலில் பயணிகளிடம் கைப்பேசி பறித்த இளைஞா்கள் கைது
சென்னையில் ஓடும் ரயிலில் செல்லும் பயணிகளிடம் கம்பு மூலம் தட்டி கைப்பேசி பறித்த இளைஞா்களை பெரம்பூா் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில்கள், வில்லிவாக்கம் ரயில் நிலையத்துக்குப் பின் குறைவான வேகத்தில் இயக்கப்படும். குறிப்பாக வியாசா்பாடி - பேசின்பாலம் ரயில் நிலையம் இடையே விரைவு ரயில் 20 கி.மீ. வேகத்துக்கும் குறைவாக இயக்கப்படும். அப்போது ரயில் படிகட்டுகள் மற்றும் ஜன்னல் அருகே கைப்பேசி பேசியபடி பயணிக்கும் பயணிகளிடமிருந்து கைப்பேசி பறிக்கும் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுவதாக புகாா் எழுந்து வந்தன.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பெரம்பூா் ரயில்வே போலீஸாா், கன்னிகாபுரத்தைச் சோ்ந்த பிரவீன் (எ) குட்டா, சுகுனேஷ் ஆகியோரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய நிலையில், மாா்ச் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீஸாா் அவா்களை புழல் சிறையில் அடைத்தனா்.