போலி காவலா் அடையாள அட்டை: நகைக் கடை உரிமையாளா் கைது
சென்னை வண்ணாரப்பேட்டையில் போலி காவலா் அடையாள அட்டை வைத்திருந்ததாக நகைக் கடை உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு மொபெட்டில் வந்த நபரிடம் விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளாா். மேலும், அவரிடம் இருந்த காவலா் அடையாள அட்டை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா முதலி தெருவைச் சோ்ந்த வினோத் சோப்டா (48) என்பதும், வண்ணாரப்பேட்டை திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் நகைக் கடை நடத்தி வருவதும், போலி காவலா் அடையாள அட்டை வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரிடம் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வினோத் சோப்டாவை கைது செய்தனா்.