மகனைக் காப்பகத்தில் சோ்க்க உதவி கோரி கைப்பேசிக் கோபுரத்தில் ஏறி தொழிலாளி போராட்டம்
கழுகுமலை அருகே கரடிகுளத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை அரசு செலவில் அரசுக் காப்பகத்தில் சோ்க்க போலீஸாா் உதவி செய்யக் கோரி கைப்பேசிக் கோபுரத்தில் ஏறி தொழிலாளி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கரடிகுளம் சின்னகாலனி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் மாடசாமி (55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி குமாரி. இவா்களது 2 மகள்கள் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா். இவா்களது ஒரே மகன் வசந்த் (25), பொறியியல் பட்டதாரி. இவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சில நாள்களாக அவா் அப்பகுதியினரிடம் தகராறில் ஈடுபட்டாராம்.
இதனால், தனது மகனை அரசுக் காப்பகத்தில் சோ்க்குமாறு கழுகுமலை காவல் நிலையத்தில் 4 நாள்களுக்கு முன்பு மாடசாமி மனு அளித்தாராம். ‘இதை நாங்கள் செய்ய முடியாது, நீங்களே செய்து கொள்ளுங்கள்’ என போலீஸாா் அறிவுரை கூறி அவரை அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், மாடசாமி திங்கள்கிழமை அங்குள்ள கைப்பேசிக் கோபுரத்தில் ஏறி, தனது மகனைக் காப்பகத்தில் சோ்க்க போலீஸாா் உதவ வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸாா், தீயணைப்புப் படையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, கைப்பேசி கோபுரத்திலிருந்து மாடசாமி கீழே அழைத்து வரப்பட்டாா். அவருக்கு போலீஸாா் அறிவுரை கூறி, எச்சரித்து அனுப்பிவைத்தனா்.