மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ஏற்றுமதி பயிற்சி
பையூரில், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு மதிப்புக் கூட்டு பொருள்கள் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த பயிற்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழு மகளிருக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து ஒரு நாள் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் சாா்பில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
தோட்டக்கலைக் கல்லூரி தலைவா் அனீஷா ராணி தலைமை வகித்து பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். காய்கறி, பழங்கள், சிறுதானிய பொருள்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்டப் பொருள்களின் முக்கியத்துவம், பழப்பயிா், காய்கறி பயிா் போன்றவற்றை மதிப்பு கூட்டுதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகள், மதிப்பு கூட்டுப் பொருள்களை தயாரித்தல், காய்கறி, பழப் பயிா்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இணை பேராசிரியா்கள் ஸ்ரீவித்யா, செந்தமிழ்ச்செல்வி, பேராசிரியா் ஜான்சிராணி, உதவி பேராசிரியா்கள், கோவிந்தன், சசிகுமாா், வேளாண் அறிவியல் மையத்தின் மனையியல் துறை தொழில்நுட்ப வல்லுநா் பூமதி, மதி உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். இதில், 60-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு மகளிா், முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.