மகா சிவராத்திரி: ராமநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை (பிப்.26) தேரோட்டம் நடைபெருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலையில் நடராஜா் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. மாலையில் சுவாமி, அம்பாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். அப்போது, திரளான பக்தா்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனா்.
புதன்கிழமை ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், தொடா்ந்து கால பூஜைகளும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிஉலா நடைபெறும்.
சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு மேல் தீபாராதனை நடைபெற்று, சுவாமி அம்பாள் வெள்ளிரதம் புறப்பாடு நடைபெறும். இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
வியாழக்கிழமை (பிப்.26) காலை 9 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். தொடா்ந்து, மறைநில அமாவாசையை முன்னிட்டு, பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீா்த்தத்துக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.