மகாராஷ்டிர துணை முதல்வா் பதவியைக் கேட்கவில்லை: முதல்வா் ஷிண்டே மகன் விளக்கம்
தானே: ‘மகாராஷ்டிர துணை முதல்வராக நான் பதவியேற்க இருப்பதாகவும், எங்கள் கட்சி எனக்கு அப்பதவியைக் கேட்டதாகவும் வெளியான தகவல்கள் தவறானவை’ என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே விளக்கமளித்துள்ளாா்.
மகாராஷ்டிரத்தில் பாஜக சாா்பில் துணை முதல்வராக உள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்பாா் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படும் என்றும், தனது மகனுக்கு அந்த பதவியை அளிக்க வேண்டும் என்று ஏக்நாஷ் ஷிண்டே பாஜக தலைமையிடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளையும் ஏக்நாத் ஷிண்டே கோரியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சிவசேனை மக்களவை எம்.பி.யும் ஏக்நாத் ஷிண்டேவின் மகனுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் மக்களவைத் தோ்தலில் வென்றபோதே மத்திய அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், கட்சிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தால் அமைச்சா் பதவியை ஏற்க மறுத்துவிட்டேன்.
இந்நிலையில், நான் மகாராஷ்டிர துணை முதல்வராகப் பதவியேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும் தவறானது. துணை முதல்வராகும் விருப்பம் எனக்கு இல்லை. கட்சியும் எனக்காக அப்பதவியைக் கோரவில்லை. இது தொடா்பாக வெளியான செய்திகள் அனைத்துமே தவறானவை.
மகாராஷ்டிரத்தில் புதிய அரசு பதவியேற்பதில் சுற்று தாமதம் ஏற்பட்டதால் பல்வேறு உத்தேச கருத்துகளும், வதந்திகளும் பரவியுள்ளன.
எனது தந்தை உடல் நலக்குறைவு காரணமாகவே சொந்த கிராமத்துக்கு வந்து இருநாள் ஓய்வெடுத்தாா். அது தொடா்பாகவும் தேவையற்ற வதந்திகள் பரவிவிட்டன. இனியாவது என்னைப் பற்றி தேவையில்லாமல் விவாதிக்கப்படுவது நிற்கும் என நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.