ஆசிய கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் தேவையா.? தமிழக முன்னாள் வீரர் கேள்வி
மகாராஷ்டிர வெள்ளம்! அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியம்: முதல்வர் ஃபட்னவீஸ்
மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில், கடந்த சில நாள்களாக கனமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதில், தற்போது வரை கனமழை மற்றும் வெள்ளத்தால் 6 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் குறைந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதியினாலும், பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், இந்தக் கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு மும்பை உள்பட கொங்கன் மற்றும் மகாராஷ்டிரத்தின் மத்திய பகுதிகளிலும், கனமழை தொடர்ந்து நீடிக்கும் என எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம் மார்த்வாடா மற்றும் விதார்பா பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாந்தேட் மாவட்டத்தின் கிராமங்களில் இருந்து சுமார் 290-க்கும் மேற்பட்டோரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்து, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கலந்தாலோசித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
“மும்பை, தாணே, ராய்காட், ரத்தினகிரி மற்றும் சிந்துதூர்க் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணிநேரம், மிகவும் முக்கியமானது. அவை தொடர்ந்து அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், சுமார் 10 லட்சம் ஹெக்டேர் அளவிலான விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், கனமழை முடிவுக்கு வந்தவுடன் அதற்கான இழப்பீடு அறிவிக்கப்படும் எனவும் துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மகாராஷ்டிரத்தின் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றன. மேலும், வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பல முக்கிய நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் ராணுவப் படைகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தமிழ்நாட்டிலிருந்து வேட்பாளரை நிறுத்தினால் தமிழக மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறையா? - கனிமொழி