மகாராஷ்டிர வெள்ளம்! அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியம்: முதல்வர் ஃபட்னவீஸ்
முத்தரப்பு பேச்சுவார்த்தை: மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு!
மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவர் லேண்ட்’ தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக நடைபெற்று வந்த காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தினச்சம்பளமாக ரூ. 26 ஆயிரத்தை வழங்கிட வேண்டும், அனைத்துப் பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை ஊக்கத்தொகையாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மதுரை மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனையடுத்து, தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ”மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
ஆனால், தங்களை போராடகூட விடாமல் தடுப்பதையே முழு முயற்சியாகக் கொண்டுள்ளனர். உரிமைகளுக்காக போராடும் தங்களை போராடகூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை” என்றார்
இதையும் படிக்க: முன்னாள் முதல்வர் மிரட்டல் விடுப்பது அநாகரிகம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்