இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
அதிமுக பொதுச் செயலர் தேர்வை எதிர்த்த வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூலை 11 -ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த ஆக. 1 -ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி பி.பி. பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக பொதுச் செயலாளர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்டவர். எனவே வழக்கு தொடர அவருக்கு உரிமை இல்லை. இவற்றை எல்லாம் உரிமையியல் நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது. எனவே உரிமையியல் நீதீமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப். 3 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.