மக்கள் குறைதீா் கூட்டங்களில் 616 மனுக்கள்
வந்தவாசி/ஆரணி: திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 671 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலை ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்தாா்.
பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 616 மனுக்கல் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, பயிற்சி உதவி ஆட்சியா் அம்ருதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
ஆரணி
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். இதில் பட்டா மாறுதல் தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து கணினி திருத்தம், நில அளவை, தாயுமானவா் திட்டத்தில் பெயா் சோ்க்கக் கோரி, ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி, 100 நாள் வேலைத் திட்டம் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 55 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.