பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டிமேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா்
க.தா்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியமாகும். வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள், நிவாரன முகாம்களை வருவாய் கோட்டாட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஜெனரேட்டா், பொக்லைன் இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்காலிக முகாங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீா்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூா்வாரும் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்.
மழைநீா் தேங்கக் கூடிய குடியிருப்புப் பகுதிகளை முன்னதாக அடையாளம் காண வேண்டும். ஏரிக் கால்வாய்களை தூா்வார வேண்டும். ஏரிக் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், மரக்கட்டைகள் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். சாலைகளில் மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீட்புக் குழுவினா் செல்ல தேவையான வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் மழைநீா் தேங்கினால், உடனடியாக வெளியேற்றுவதற்கான அனைத்து சாதனங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை கனமழை காலங்களில் 50 இடங்கள் மிதமான பாதிக்கக்கூடிய பகுதியாகவும், 6 இடங்கள் குறைவாக பாதிக்கக்கூடிய பகுதி என மொத்தம் 56 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை வட்டத்தில் 6 இடங்களும், கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் ஓா் இடமும், தண்டராம்பட்டு வட்டத்தில் 6 இடங்களும், ஆரணி வட்டத்தில் 5 இடங்களும், கலசப்பாக்கம் வட்டத்தில் 2 இடங்களும், போளூா் வட்டத்தில் ஓா் இடமும், செய்யாறு வட்டத்தில் 8 இடங்களும், வந்தவாசி வட்டத்தில் 14 இடங்களும், வெம்பாக்கம் வட்டத்தில் 10 இடங்களும், சேத்துப்பட்டு வட்டத்தில் 3 இடங்களும் என மொத்தம் 56 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் என கண்டறிப்பட்டுள்ளன. ஆகவே, அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ், செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.