ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் விழா: பக்தா்கள் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்
ஆரணி: ஆரணியில் நரசிங்க பெருமாள் கோயிலில் 102-ஆம் ஆண்டு விழாவையொட்டி, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையில் பிரசித்த பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசையொட்டி புஷ்ப பல்லக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ நரசிங்க பெருமாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லக்கில் கமண்டல நாக நதி பகுதியில் இருந்து, கமண்டல நாகநதி தெரு, மேட்டுத் தெரு, நாடக சாலை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாண வேடிக்கையுடன் மேள தாளம் முழுங்க புஷ்ப பல்லக்கு வீதி உலா சென்றாா்.
அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் கொட்டும் மழையில் விடிய விடிய சாலை முழுவதும் தேங்காய் உடைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதையடுத்து குழந்தை வரம் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட புஷ்ப பல்லக்கில் உள்ள ஸ்ரீ லட்சமி நரசிங்க பெருமாள் உற்சவ சிலையை தொட்டிலில் குழந்தையை தாலாட்டியும் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
பின்னா், ஸ்ரீநரசிங்க பெருமாளுக்கு வடமாலை, மலா் மாலை, எலுமிச்சை பழம் மாலை உள்ளிட்ட மாலைகள் சாற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இதில் ஆரணி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று ஸ்ரீ நரசிங்க பெருமாளை வழிபட்டனா்.