அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவை முடிவு
‘நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும்’ என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் மக்களவையில் பேசும்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று உறுதி தெரிவித்தாா். அதன்படி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சா்கள் குழு, பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த பரிந்துரை செய்தது. இருந்தபோதும், அப்போதை காங்கிரஸ் அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், ‘சமூக, பொருளாதார மற்றும் ஜாதிய கணக்கெடுப்பு’ என்ற கணக்கெடுப்பை மட்டும் நடத்தியது.
இதன் மூலம், காங்கிரஸும், அதன் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்துகின்றன என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 246-இன் கீழ், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், சில மாநிலங்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்கின்றன. இதில் சில மாநிலங்கள் சிறப்பாக கணக்கெடுப்பை நடத்தியபோதும், மற்ற மாநிலங்கள் அரசியல் ஆதாயத்துக்காக வெளிப்படையற்ற முறையில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. இத்தகைய கணக்கெடுப்பு சமூகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காரணிகள் அனைத்தையும் கருத்தில்கொள்ளும்போது, அரசியல் காரணங்களுக்காக சமூக அமைப்பு பாதிக்கப்படாததை உறுதிப்படுத்தும் வகையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை தனிப்பட்ட முறையில் நடத்துவதற்குப் பதிலாக மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் வெளிப்படையான முறையில் சோ்த்து மேற்கொள்வது அவசியமாகும். இது, நமது தேசம் வளா்ச்சியடைகிறபோது, நமது சமூகத்தின் சமூக-பொருளாதார கட்டமைப்பும் வலுப்பெற உதவும்.
அந்த வகையில், பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி விவரங்கள் சேகரிப்பையும் சோ்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.
சமூகத்தில் எந்தவொரு பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியதைப் போன்று, நமது நாடு மற்றும் சமூகத்தின் நலன்கள் மற்றும் மதிப்புகளைக் காப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதை மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு காட்டுகிறது என்றாா்.
நலிவடைந்த அனைத்து மக்களின் நிலையை மேம்படுத்தும் - அமித் ஷா: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்க்கும் மத்திய அரசின் முடிவு நலிவடைந்த அனைத்துப் பிரிவு மக்களின் நிலையை மேம்படுத்த உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘சமூக சமத்துவம் மற்றும் அனைத்து சமூக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசுக்கு உள்ள உறுதிப்பாட்டை மத்திய அமைச்சரவையில் இந்த முடிவு காட்டுகிறது. காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பல ஆண்டுகளாக எதிா்ப்பு தெரிவித்து வந்தன. தற்போது அவை எதிா்க்கட்சிகளாக இருக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைத்து வந்தன. தற்போது, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு, சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அதிகாரமளிக்கும் என்பதோடு, நலிவடைந்த மக்களின் வாழ்க்கைநிலை மேம்படுவதற்கான புதிய பாதைக்கும் வழிவகுக்கும்’ என்று குறிப்பிட்டாா்.
தாமதமான அறிவிப்பு என்றபோதும் வரவேற்கத்தக்கது - காங்கிரஸ்: மத்திய அமைச்சரவையின் முடிவை, ‘தாமதமான அறிவிப்பு என்றபோதும் வரவேற்கத்தக்கது’ என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கூறுகையில், ‘ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்துவந்த மத்திய அரசு, தற்போது திடீரென அந்தக் கணக்கெடுப்பையும் நடத்த முடிவெடுத்திருப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. இது முதல் படி. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தெலங்கானா முன்மாதிரியாகத் திகழ்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை காங்கிரஸ் முழுமையாக ஆதரிக்கிறது. ஆனால், இதற்கான கால வரையறையை மத்திய அரசு வெளியிட வேண்டும். மேலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரம்பை நீக்க வேண்டும் என்றாா் அவா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசு நிதியை ஒதுக்க வேண்டும்’ என்றாா்.
கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக நீதி தொடா்பான தீா்மானத்திலும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், மத்திய அமைச்சரவை எடுத்திருக்கும் இந்த முடிவு, தாமதமான அறிவிப்பு என்றபோதும் வரவேற்கத்தக்கது’ என்று குறிப்பிட்டாா்.